கோவளத்துக்குச் சென்று வர 6 காரணங்கள்

2:42 pm 3 Nov, 2016

கோவளத்தை யாருக்குத் தான் பிடிக்காது? சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தள்ளி, வங்காள விரிகுடாவின் கோரமண்டல கடற்கரையில் அமைந்துள்ளது, கோவளம் என்ற ‘கோவ்லாங்’ கடற்கரை. கரையெங்கும், வைரம் போல் ஜொலிக்கும் மணல்; சுற்றிப் பார்க்கும் திசையெல்லாம் கண்கவர் மிக்க காட்சிகள்; இதைப் போன்றதொரு கடற்கரையை வேறெங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்!

நமக்கு நெருக்கமானோர்களோடு  சில நேரம் நிம்மதியாகவும் களைப்பாரவும் கழிக்க இது ஒரு அருமையான இடம்; அதோடு காலத்தைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும் இங்கு பல நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் படிப்படியே தற்போது காணலாம் :

1) கதிரவன் மறைகையில், கரையோரம் ஒரு பயணம் :

சூரியன் மறையும் காட்சியை எங்கிருந்து பார்த்தாலும் அழகாகத் தான் இருக்கும்; அதுவும் கோவளத்தைப் போல ஒரு கடற்கரையிலிருந்து பார்த்தால் அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தக் காட்சியைக் காண்பதற்குச் சென்னை வாசிகள் வெகு தொலைவிலிருந்து கூடப் பேருந்தில் வந்து செல்கின்றனர்

2) மீன்பிடித்துக் கொண்டாடுங்கள் :

விடியற்காலையில் கடற்கரைக்குப் போனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தியவாறு இருப்பதைப் பல முறை கண்டிருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதாவது அவர்களைப் போல் கடலில் மீன் பிடிக்க விருப்பப் பட்டு இருக்குறீர்களா? அப்படிப்பட்ட ஆசை இருந்தும் அது நிறைவேறாத விரக்தி பலருக்கு உண்டு; ஆனால் கவலைப் பட வேண்டாம்! இங்கு கோவளத்தில் சுற்றுலாப் பயணிகளும் பார்வையாளர்களும் மீனவர்களைப் போல மீன்பிடிப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வசதிகள் உண்டு. நீங்கள் பிடிக்கும் மீன்களை நீங்களே சமைத்துச் சாப்பிடவும் செய்யலாம். குறிப்பாக, இது வரை மீன் பிடித்திராதவர்களுக்கு இந்த அனுபவம் மனதில் அழியாத நினைவாக இருக்கும்.

3) நீர் விளையாட்டுகள் :

நீரில் சாகசம்  செய்ய விரும்புவோர்க்கு ஏற்ற இடம், கோவளம். நம் நாட்டின் கிழக்குக் கரையில் இது போன்ற சாகசங்கள் செய்யக் கூடிய வசதிகள் பெற்ற இடங்கள் வெகு சில தான் இருக்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளும் சாகசப் பிரியர்களும் கோவளத்தில் குவிந்து வருகின்றனர். முக்கியமாக, கோவளத்தில் நீர் சருக்கும் போட்டி பிரபலம்.
இங்குள்ள அலைகள் நீர் சருக்குவதற்கு ஏற்றதாக இருப்பதாக விளையாட்டு வீரர்கள் பலர் கூறியுள்ளனர்; ஆனால் ஒரு எச்சரிக்கை. நீர் சருக்கம் விளையாட்டு எல்லாருக்கும் உகந்ததன்று; அதற்குத் துணிவும் உடல் வலிமையும் அவசியம். எனவே, நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டு, விளையாடும் தகுதியும் பெற்றவர்களுக்கு கோவளம் ஒரு சொர்கம் எனலாம்!

4) பாழடைந்த திருச்சபை தரும் மர்மமானதொரு உணர்ச்சி :

கரையிலிருந்து சற்றே தள்ளிப் பார்த்தால், ஒரு பழைய கத்தோலிக்க திருச்சபையை உங்களால் காண இயலும். இந்தத் திருச்சபை ஒரு டச்சு நாட்டுக் கோட்டையைப் போல் இருக்கும். சுற்றுலாப் பயணிகளைத் தவிர , ஆதிகால கட்டிடங்களிலும் கோட்டைகளிலும் ஆர்வம் பெற்றோரும் கோவளத்துக்கு இதைப் பார்ப்பதற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

5)  நீலக் கடலும் வெள்ளிக் கரையும் :

கோவளத்துக் கடற்கரையிலுள்ள மணல் ஒரு விதத்தில் கண்ணாடி போல ஜொலி ஜொலிக்கும்; சூரிய ஒளி அதன் மேல் பட்டவுடன் மொத்தக் கரையும் வெள்ளியால் செய்யப்பட்டது போல ஒளிர் விடும். தெளிவான கடலும் கூட,  வானத்தின் வண்ணத்தைப் பிரதிபலித்து ஒரு பிரம்மாண்டமான நீலத் திரையாய்க் காட்ச்சியளிக்கும். இவை இரண்டையும் ஒரு சேரக் காண்கையில் சொர்கத்தையே நேரில் கண்ட உணர்வு ஏற்படும். இந்தக் காட்சியை வாழ் நாள் வரைக்கும் நீங்கள் கண்டிப்பாக மறக்க மாட்டீர்கள்!

6) வண்ணமிகு கடற்கரையின் எழில் :

கோவளத்தில் வண்ணங்களுக்குப் பஞ்சமே இல்லை. இங்கு கடலும் கரையும் மட்டும் வண்ணத்தில் திழைக்காது; கரையில் ஆங்காங்கே கிடக்கும் சிப்பிகளும் பனை மரங்களும் குறிப்பிட்ட முறையில் அலங்கரித்து வைத்தாற் போல் அற்புதமாகக்  காட்சியளிக்கும். இந்த வண்ணங்களின் விருந்து கண்டிப்பாக உங்களைக் களிப்பில் ஆழ்த்தும்.

இறுதியாக, நீங்கள் கோவளத்துக்கு விடை பெறும் போது, உங்கள் பையில்  சிப்பிகளையும் உங்கள் மனதில் சந்தோஷமான பல நல்ல அனுபவங்களின் நினைவுகளையும் எடுத்துச்  செல்வீர்கள்!DiscussionsTY News