வாழ்க்கையை வீணாக்க 17 ஆலோசனைகள்

Updated on 1 Sep, 2017 at 7:43 pm

நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அருமையான வாழ்வைக் கெடுத்துக் கொள்ள அவ்வளவு முயற்சி ஒன்றும் தேவையில்லை; சொல்லப்போனால், இவ்வுலகில் வாழும் மக்களின் வரலாற்றைக் கொண்டு,  வாழ்க்கையை முற்றிலுமாக வீணாக்கிக் கொள்வது எப்படி என்று எண்ணற்ற புத்தகங்களை எழுதலாம். வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ள காந்தி, மண்டேலா, நியூட்டன், பிக்காஸோ முதலியவர்களைக் காட்டிலும் வாழ்க்கையை வீணாக்கியவர்களின் எண்ணக்கை தான் அதிகம்.

அவர்களின் வாழக்கையின் அருமையான கொள்கைகளின் அடிப்படையில், வாழ்க்கையை வீணாக்க விரும்புவோர்க்கு 17 அம்சத் திட்டம் ஒன்றை இங்கு கீழே விளக்கியுள்ளேன் .

1) தவறுகளைத் திருத்திக் கொள்ளாதீர்கள்  :

வாழ்வில் தவறான முடிவுகளை எடுங்கள்; எடுத்துத் தோல்வி மீது தோல்வியாகப் பெறுங்கள்; பெறும் தோல்விகளிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளதீர்கள். தோல்வியடைந்த பின் தோல்விக்கானக் காரணங்களை ஆராயாதீர்கள்.

இவற்றைச் செய்தாலே , உங்களின் வாழ்க்கையை நிச்சயம் கெடுத்துக் கொள்வீர்கள்.

2) தவறான சுற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் :

உங்களைச் சுற்றியிருப்பவர்களால் தான் உங்கள் வாழ்க்கைத் தடம் நிர்ணயிக்கப்படுகிறது; எனவே, தகா நட்புகளைப் பாராட்டுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசுபவர்களை விட்டுவிட்டு புரளிகளைக் கிளப்புகவர்களை நண்பர்களாகக் கொள்ளுங்கள்; உங்களின் திறமைக்குச் சவாலிடுபவர்களை விட்டு விட்டு புறம்பேசுபவர்களோடு பழகுங்கள். நாசத்தின் கதவை நீங்கள் அடைந்து விடுவீர்கள் !

3) கனவு காணுங்கள்! காணுங்கள்! கண்டு கொண்டே இருங்கள் ! 

அற்புதமாகக் கனவு காணுங்கள்; உலகை வலம் வர வேண்டும், எவரஸ்ட் சிகரத்தைத் தொட வேண்டும் , ஆழ்கடல் நீந்த வேண்டும் என்றெல்லாம் கனவு காணுங்கள் . காணும் கனவுகள் பலிக்க எந்த முயற்சியும் தவறிக்கூட எடுத்த விடதீர்கள். எல்லா முயற்சிகளையும் முடிந்த அளவு தள்ளிப்போட்டுக் கொண்டே இருங்கள். இவை, சமூகத்தில் நிச்சயமாக உங்களை ஒரு மூடனாகக் காட்டிடும்.

 

4) உதவிக்கரம் நீட்டுவோரைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !

உங்களுக்குத் தேவையான போது மட்டும் பிறரை நாடுங்கள்; தேவை பூர்த்தியான பின் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். பலனை எதிர்ப்பார்த்துப் பிறருக்கு உதவுங்கள். இப்படியே செய்து வந்தால், உதவி செய்ய எவரும் வரமாட்டர்கள்.

5) சமூகத்தில் பிறரோடு பழகிடாதீர்கள் :

பிறரிடம் பேசாதீர்கள்; உங்களின் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்; கிணற்றுத் தவளையாய் நீர் உண்டு நும் வேலை உண்டு என்று இருங்கள்; இறுதியில் தனிமையால் வாடித் தவிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

6) சாகும் வரைக் கெட்ட விஷயங்களைப் பற்றியே எண்ணுங்கள் :

செய்யும் ஒவ்வொரு தவறைப் பற்றி மட்டுமே நினைத்து நினைத்து வருந்துங்கள்; நீங்கள் செய்யும் நல்ல காரியங்களைப் பற்றியும், பெற்ற வெற்றிகளைப் பற்றியும் எண்ணாதீர்கள்; வாழக்கையைத் தவறான கோணத்தில் மட்டும் பாருங்கள். பிறர் உமக்கு வழங்கிய வாழ்த்துகளை எல்லாம் மறந்து, நம்பிக்கையற்ற ஒரு வாழக்கையை வாழுங்கள்.

7) மன்னிப்பைத் தமிழில் உங்களுக்குப் பிடிக்காத பல வார்த்தைகளுள் ஒன்றாக்குங்கள் :

நீங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் மன்னித்தாலும், நீங்கள் பிறர் உங்களுக்கு இழைக்கும் தவறுகளை மன்னிக்கவும் கூடாது; மறக்கவும் கூடாது. மெல்ல மெல்ல, உங்கள் நெஞ்சில் ஒரு பாரம் உண்டாகும்; அதை மென்மேலும் வளர்த்து வாழ்வில் மகிழ்ச்சியை மறந்து விடுங்கள்.

8) உங்களின் தவறுகளுக்குப் பிறர் மீது பழிப் போடுங்கள் :நீங்கள் புரிந்த தவறான செயல்களுக்கு, சம்பந்தமில்லாத ஒன்றைக் காரணமாகக் கூறுங்கள்; கூட.இருப்பவர்களைக் கைக் காட்டுங்கள்; இல்லையெனில் வீட்டில் இருப்பவர்களைக் கைக் காட்டுங்கள்; இல்லையென்றால், குடும்ப நிலையைக் கைக் காட்டுங்கள்; அதுவும் இல்லை எனில் விதியைக் கைக் காட்டுங்கள். வாழ்க்கையை வீணாக்க முற்பட்டவர்களுக்குச் சாக்குச் சொல்லவா கற்பிக்க வேண்டும் ? மொத்தத்தில், உங்கள் தவறை ஒரு போதும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.

9) தாழ்வு மனப்பான்மையால் , பொறாமை வளர்த்துக் கொள்ளுங்கள் :

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களின் எப்படி எல்லாம் வாழ்வை அனுபவிக்கிறார்கள் என்று பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்; அவர்களுடைய வாழ்க்கையைக் காட்டிலும் உங்கள் வாழ்க்கையை இழிவாகக் கருதுங்கள்; பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து வருந்துங்கள்; தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறெந்த வழியுமில்லை என்று எண்ணுங்கள்; அவ்வாறே, தற்கொலை செய்து கொண்டால், உங்களின் துன்பங்கள் எல்லாம் நீங்கி விடும் என நம்புங்கள்.

10) நிதானமாக யோசிக்காமல் முடிவெடுங்கள் :

எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றிச் சற்றும் நினைக்காதீர்கள். உணர்ச்சி வசப்பட்டு, தவறான முடிவுகளை எடுங்கள்; கோவமாக இருக்கும் போதும், வருத்தமாக இருக்கும் போதும், குடிபோதையில் இருக்கும் போதும், முடிவெடுங்கள்; வாழ்வின் தவறான பக்கத்தைப் பார்ப்பீர்கள்.

11) தொலைக்காட்சி மற்றும் இதர சமூக வளைத்தளங்களில் மட்டும் உங்களின் கவனத்தைச் செலுத்துங்கள் :

அர்த்தமற்ற தொடர்களையும் , சமூக வளைத்தளங்களில் உங்களின் நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் மனப்பாடம் செய்து விடுங்கள்; எயின்ஸ்டெயின் , எடிசன் , நியூட்டன் முதலியவர்களுக்கும் ஒரு நாளில் உங்களுக்கு இருக்கும் அதே நேரம் தான் இருந்தது என்பதை மறந்திடுங்கள்; அவர்கள் தங்களின் வாழ்வில் செய்த தியாகங்கள் பற்றியெல்லாம் நமக்கு எதற்கு? வாழ்க்கையைப் பயனுள்ளதாகக் கழிக்க எண்ணுவோர்க்குத் தானே அதெல்லாம்?

12) கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பயனற்ற வழிகளில் செலவழியுங்கள் :

சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்று புரியாமல் தொடர்ந்து செலவு செய்யுங்கள்; வரவுக்கு மீறிக் கடன் வாங்கியாவது, இரண்டு மாதத்துக்கு முன்பு நீங்கள் வாங்கிய கைப்பேசிக்குப் பதிலாக,  இன்று வெளியாகும் ஒரு கைப்பேசியை வாங்குங்கள். வாங்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் தேவையில்லாவிட்டாலும் வாங்குங்கள்; வாழ்க்கையைச் சீரழிக்க வழிவகுக்கும் முதல் படியானப் பணத் திண்டாட்டத்தைப் பெற்றிடுவீர்.

13) புதிதாக எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள் :

வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட கலைகள் மட்டுமே உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போதுமானது என நம்புங்கள்; புதிதாக வெளியாகும் எதைப் பார்த்தும் ஆர்வம் கொள்ளாமல், அச்சப்படுங்கள். தவறியும், எதைப் பற்றியும் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாதீர். வாழ்க்கை இருள் மையமாக இதை விடச் சிறந்த வழி இல்லை.

14) பள்ளியிலும் கல்லூரியிலும் வெட்டியாக இருங்கள் :

தேர்வுகளில் தேர்ந்து பட்டம் வாங்க மட்டும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லுங்கள்; எந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். இறுதியில், வேலை வாய்ப்புக் கிட்டாமல், வீட்டில் வயதானப் பெற்றோர்களின் தயவில் ஒரு தண்டச்சோறாகி அவமானத்தால் தலைக் குனியுங்கள்.

15) ஏதாவது நோயின் அறிகுறிகள் தென்பட்டால், அவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள் :

உங்களின் உடம்பில் ஏதேனும் கட்டி உருவானாலோ அல்லது அடிக்கடி தலைவலி ஏற்பட்டாலோ கவலைப் படாதீர்கள்; அவையெல்லாம், சாதாரணம் என நம்பி அலட்சியமாக இருங்கள்; மருத்துவரிடம் சென்று வர ஆயிரம் முறை யோசியுங்கள். அப்போது தான், ஒரு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து வியப்பீர்கள்; மருந்துக்காகவே உங்கள் சொத்தை விற்று விடுங்கள். இல்லையேல், மரணம் உறுதியானதை எண்ணி வருந்துங்கள்.

16) நீங்கள் நினைப்பது தான் உலக நியதி என ஆணித்தனமாக நம்புங்கள் :

மற்றவர்களின் சிந்தனைகளைப் பற்றியும் கருத்துகளைப் பற்றியும் யோசித்து உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் எண்ணும் போக்கில் தான் இவ்வுலகம் இயங்குகிறது என நம்புங்கள். அழிவிற்கு வித்திட்டாலும் உங்களின் ஆணவத்தையும் கர்வத்தையும் விட்டுக் கொடுக்காதீர்.

17) உங்களைச் சுற்றித் தான் உலகவியல் இருக்கிறது :

நீங்கள் சிறு பிள்ளையாக இருந்த போது, எல்லாரும் உங்களை அக்கறையோடு பார்த்துக் கொண்டது போல், வாழ்வு முழுமையும் பார்த்துக் கொள்வார்கள் என நம்புங்கள்; உலகில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுள் நீங்களும் ஒருவர் என்று உணராதீர். உங்களின் பிரச்சனைகளத் தீர்க்க மற்றவர்களை எதிர்ப்பாருங்கள். ஏழ்மையும் துன்பமும் உங்களை விட்டு என்றும் பிரியாது.