‘தக்ஷிணச் சித்ரா’ எனும் திறந்த வெளி அருங்காட்சியகத்தைப் பார்க்க 7 காரணங்கள்

2:55 pm 3 Nov, 2016

‘தக்ஷிணச் சித்ரா’ என்றால் ‘தெற்குப் பகுதியின் சித்திரம்’ என்று அர்த்தம். தன் பெயருக்கு ஏற்றாற் போலவே, காலம் காலமாக தென்னிந்தியக் கலைகளும் கலாச்சாரங்களும் அழகிலும்  புதுமையிலும் எவ்வாறு மெருகேறியுள்ளன என்பதைத் தக்ஷிணச் சித்ரா தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த அமைப்பு, மதராஸ் கைவினை அறக்கட்டளையின் முயற்சிகளால் விளைந்த  பயனாகும். உலகமயமாக்குதலாலும், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கத்தாலும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அழிந்து கொண்டிருந்த தென்னிந்திய மரபுகளை மீட்கும் பொருட்டுத் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, பொது மக்களின் பார்வைக்காக 1996 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.  நம் நாட்டு வரலாற்றின் சிறப்பை எடுத்துரைத்து, இன்றைய சூழலில் அதன் முக்கியமான பங்கினை எடுத்துக்கூறும் ஒரு நூதனமான முயற்ச்சியாகத் தக்ஷிணச் சித்ரா கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட இடத்தை நீங்கள் பார்த்து வர  7 காரணங்களைக் காணலாம் :

1) தென்னிந்திய கலைகள் அனைத்தையும் கொண்டாடும் ஓர் இடம் :

தக்ஷிணச் சித்ரா  ஒரு சாதாரணமான இடம் இல்லை; 10 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் ஒரு மாதிரி கிராமம். இந்தத் திறந்த வெளி அருங்காட்சியகத்தைச் சுற்றி வருகையில் நம்மை நாமே அறிந்து கொள்ள முடிகிறது; நம் ரசனைகளைத் தூண்டும் அனுபவமாக இது அமைகிறது. இயல், இசை, நாடகம் ஆகியவை காலப்போக்கில் பெற்ற பல்வேறு வடிவங்களுக்கு அர்த்தமளிக்கும் இடமாக இது விளங்குகிறது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கும்  தனித்தனியே பிரிவுகள்  அளித்து தத்தம் சிறப்குகளைப் பறைச்சாற்றுகிறது, தக்ஷிணச் சித்ரா.

2) கைத்தொழிலின் உந்துகோல் :

எந்த ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியிலும் தொழிற்துறையின் பங்கீடு பெரிதாக இருக்கும். குறிப்பாக, இயந்திரங்களின் வருகைக்கு முன்பாக, கைத்தொழில்கள், மக்களின் பொருளாதாரத்துக்குக் காரணமாக இருந்தது. தொடர் முயற்ச்சியால், கைவினைப் பொருட்களின் தரம் உயர்ந்தது. 19ஆம் நூற்றாண்டுக்குப் பின், தொழிற் புரட்சியால் இந்தத் துறை சரியத் தொடங்கியது. தற்போது, தக்ஷிணச் சித்ரா போன்ற அமைப்புகள் தான் கைவினைப் பொருட்களின் தனித்தன்மையை மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பரப்பி, அவற்றின் மறுமலர்ச்சிக்கு உதவுகின்றன. முழுக்க முழுக்க தென்னிந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த கைத்தொழிற் திறன்களை, பொருட்காட்சிகள் நடத்தி தக்ஷிணச் சித்ரா பாதுகாத்து வருகிறது.

3) தென்னிந்தியாவின் நாட்டுப்புற கலைகளின் மறுமலர்ச்சி :
தென்னிந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பல விதனான நாட்டுப்புற கலைகள் வேர் ஊன்றி இருக்கின்றன. பொதுவாக, கிராமப்புறங்களில் திருவிழாக்களின் போதும் பண்டிகைகளின் போதும் இக்கலைகளின் மூலமாகத் தான் மக்கள் கொண்டாடுவர். தற்போது. நகரங்கள் பெருகி வரும் நிலையில் நமது மரபுக் கலைகள் படிப்படியாக அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியும் இணையதளமும் அவற்றின் இடங்களை நிரப்பியுள்ளன. இந்நிலையில், வருங்கால சந்ததியினர்க்கு பொம்மலாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகள் இருந்தன எனத் தெரிய வேண்டுமெனில், முதலில் இளைஞர்களிடையே அவற்றைப் பிரபலமாக்குதல் அவசியம். எனவே தான், தக்ஷிணச் சித்ரா பல்வேறு நாட்டுப்புற கலைகளைப் பயிற்று வித்து அவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது.

4) பாரம்பரிய இயல், இசை, நாடகத்தின் சங்கமம் :

தென்னிந்தியா என்றால் ஆடலும் பாடலும் இல்லாமல் இல்லை. தக்ஷிணச் சித்ரா, ஒரு திறந்த வெளி அருங்காட்சியகமாக இருப்பதால், கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாகச் செயல்படுகிறது. பரதநாட்டியம், கத்தகளி போன்ற பிரபலமான நடன முறைகள் மட்டுமில்லாமல் தேவராட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், பாவ கத்தக்களி, வெள்ளக்களி, கொம்மு கொய்யா, படயணி, தோலு குனிது, கரகாலு ஆகிய நடனங்களையும் கூட மையமாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, தக்ஷிணச்  சித்ரா. அரைவட்டப் பள்ள வடிவில் உள்ள மேடையில், இசை – ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி அமைத்து, இசையின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் வழிபாட்டுத் தலங்களுடனான அதன் உறவைப் பற்றியும் நாட்டுப்புற இசையின் பிறப்பைப் பற்றியும் பாமரர் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வருகிறது. இது போன்ற முயற்சிகளால் கலைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது, தக்ஷிணச் சித்ரா. மேலும் பள்ளி மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட இக்கலைகளைக் கற்றுக் கொள்ள பயிற்சி முகாம்களைத் தக்ஷிணச் சித்ரா நடத்தி வருகிறது.

5) தென்னிந்தியப் பண்டிகைகளின் வருடாந்திர கொண்டாட்டம் :

தென்னிந்தியாவிலுள்ள நான்கு மாநிலங்களிலும் தனித்தனியே பண்டிகைகளைக் கொண்டாடுவர். ஆந்திராவில் உகாதியையும் , கர்நாட்டகாவில் தசராவையும் , கேரளாவில் ஓணத்தையும் , தமிழ்நாட்டில் பொங்கலையும் கொண்டாடுவர்; இப்பழக்கத்தை ஒத்து, தக்ஷிணச் சித்ராவிலும் இப்பண்டிகைகள் நாட்டுப்புற கலைகளின் மூலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைகளின் நோக்கம், பலதரப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதே; இவ்வாறு மக்கள் கூடும் இடத்தில் பல விதமான மரபுகளைப் பற்றியும் மக்கள் அறிகின்றனர்.

6) வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் :

தக்ஷிணச் சித்ராவில் இந்தியாவின் தெற்குப் பகுதியின் கலைகளைப் பற்றி மட்டும் பறைச்சாற்றாமல் பிறப் பகுதிகளின் கலை மற்றும் கலாச்சாரங்களைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சொல்லப் போனால், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து கூடக் கலைஞர்கள் இங்கு வந்து தங்கள் திறமைகளைக் காட்டுகின்றனர்.

7) அருமையான உணவின் உறைவிடம் :

தக்ஷிணச் சித்ராவில் கணலி என்ற உணவு விடுதி இருக்கிறது; இங்கு தாலி, பிரியாணி முதலிய எல்லா தென்னிந்திய உணவுகளையும் சுவைக்கலாம். சுத்தமான சைவ அசைவ தென்னிந்திய உணவுகளோடு இனிப்பு மற்றும் பலகாரங்களையும் உண்டு களிக்கலாம்.DiscussionsTY News