நீங்களும் ‘ஐஏஎஸ்’ அதிகாரி ஆகலாம் – 4 வெற்றிக் கதைகள்

Updated on 19 Jan, 2018 at 2:17 pm

Advertisement

இந்தியாவின் தலைசிறந்த போட்டித் தேர்வுகளில் , குறிப்பாக ஐஏஎஸ் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கு, நிஜ வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களின் வெற்றிக் கதைகளை விட உந்துகோலாக வேறு எதுவும் இருக்க முடியாது. பெரிய பெரிய இலட்சியங்களை மனதில் கொண்டு , எண்ணற்ற இடர்களுக்கு மத்தியிலும் அந்த இலட்சியங்களை விடாது ,தொடர்ந்து போராடி வெற்றி பெற இக்கதைகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகும் தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க உதவும் நால்வரின் கதைகளைக் காண்போம். இவற்றில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

4. ரேஷ்மி ஜகாடே – 2010 ஆம் ஆண்டில் புனேவிலிருந்து தேர்ச்சி பெற்ற ஒரே பெண் ஐஏஎஸ் அதிகாரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரைச் சேர்ந்த ரேஷ்மி சித்தார்த் ஜகாடே ஒரு அறிவியல் பட்டதாரி ; பள்ளியில் தன் கூடப் படித்துப் பாதியிலேயே வெளியேறிய சித்தார்த் ஜகாடே தான் இவரது கணவர். அவருக்குத் தன் மனைவியை ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இதை ரேஷ்மியிடம் கூறினார். அறிவியலில் பட்டம் பெற்ற ரேஷ்மிக்கு பொதுத்துறைச் சேவைகளுக்கான தேர்வுகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை ; எனினும், தன் கணவனின் விருப்பத்திற்காக இத்தேர்வில் சேர்ந்தார்.

2003 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஐஏஎஸ் பயணம் பல இன்னல்களைச் சந்தித்தது. தொடர்ந்து மூன்று முறை இரண்டாம் கட்டத்திலேயே வெளியேறினார்;  நான்காவது முறை முயன்ற போது நேர்காணல் சுற்றில் தோல்வியடைந்தார்.  இவ்வளவு முறை முயன்றும் வெற்றிக் கனியை அவரால் அடைய முடியவில்லை ; எனினும், அவரின் கணவர்  ரேஷ்மிக்குப் பக்க பலமாக இருந்து அவர் மனந்தளராமல் பார்த்துக் கொண்டார். ஒரு வருடம் ஓய்வு எடுத்த பின் மீண்டும் தேர்வுக்காகப் படிக்கத் துவங்கினார் ; இம்முறை  புவியியலைக் கைவிட்டு வரலாற்றைத் தேர்வு செய்தார்; கடினமாக உழைத்தார் ; தோல்விகள் அவரைச் சற்றும் பாதிக்க அவர் விடவில்லை. முடிவாக, 2010 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 800 போட்டியாளர்களில் 169 ஆவது இடத்தைப் பிடித்து ,அந்த ஆண்டு புனேவிலிருந்து தேர்ச்சி பெற்ற ஒரே பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற அரிய சாதனையையும் படைத்தார்.  பல முறை தோல்வியடைந்தாலும் , தன் கணவனின் துணையோடு கடினமாக உழைத்து வெற்றியைப் பெற்ற ரேஷ்மி பலருக்கும் ஒரு முன்னோடியாக உள்ளார்.

Rashmi-Zagade-–-The-Only-Lady-IAS-Officer-from-Pune-in-2010

 

3. கோபால சுந்தரராஜ் மற்றும் ஆர்.வி.கர்ணன் – தடைகளைத் தகர்த்தெறிந்த வெற்றியாளர்கள்

2012 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் , கோபால சுந்தரராஜ்  நாட்டில் 5 ஆவது இடத்தைப் பிடித்தார் ; ஆனால் இவரது இந்தச் சாதனைக்குப் பின் பல துன்பங்கள் நிறைந்திருந்தன. தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர்கள் தொடக்கப் பள்ளி வரை தான் படித்திருந்தனர். தங்களின் மகனை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாய்க் கொண்ட பள்ளியில் சேர்க்க விரும்பினர் ; எனினும், ஏழ்மை அவர்களைத் தடுத்து விட்டது. ராஜ், தன் மனதில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என எண்ணினார்.படிப்பதற்கான ஏற்ற சூழல் இல்லாத போதிலும்,  தன் கனவுகளை நினைவாக்க கடினமாக உழைத்தார். இறுதியாக, அவர் வெற்றி பெற்ற போது அவரின் பெற்றோர்களாலே அதை நம்ப முடியவில்லை. சுந்தரராஜின் கதை நம் எல்லாருக்கும் முயற்சி மற்றும் மனவலிமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.

அதே 2012-ல் , நாட்டில் 158 ஆவது இடத்தைப் பெற்று , ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றுக் கொண்டவர், ஆர்.வி.கர்ணன். இவர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியைச் சேர்ந்தவர் . தந்தை ஒரு கல்லூரியில் நூலகராய்ப் பணிபுரிந்தார் ; தாய் காரைக்குடியில் உதவிப் பதிவாளராய் வேலையில் இருந்தார். தமிழ் மொழியில் கல்வி கற்றிருந்தாலும் , ஐஏஎஸ் தேர்வுகளுக்காக எந்த விதமான பயிற்சி நிலையங்களுக்கும் செல்லாமல் சொந்தமாக முயன்று வெற்றி பெற்றார். 2007 -ல் நடந்த இந்திய வனப் பணிக்கான தேர்வில், கர்ணன் தேசிய அளவில் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gopala-Sundara-Raj-and-R.V.-Karnan

 

2. கே. ஜெயகணேஷ் – சர்வராக இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனவர்

இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள வினவமங்கலம்  கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை , கிருஷ்ணன் அதே கிராமத்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணி புரிந்தார். குடும்பத்தின் மூத்த வாரிசான ஜெயகணேஷுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தனர்.வறுமையின் காரணமாக அவர், பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்புடன் முடித்துக் கொள்ள நேரிட்டது.பிறகு, குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக பல வேலைகளைச் செய்துள்ளார்; ஒரு சர்வராகக் கூட இருந்துள்ளார். இந்நிலையில்  தான் அவருக்கு இந்திய பொதுத்துறைத் தேர்வுகளின் மேல் ஆர்வம் வந்தது. தன் கனவின் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர் தொடர்ந்து ,நெருக்கடிகளுக்கு இடையே முயன்றார் ; ஆறு முறை திறக்காத கதவுகள் , கடைசி வாய்ப்பான ஏழாம் முறை, அவர் பொதுத்துறைத் தேர்வுகளில் இந்திய அளவில் 156 ஆவது இடத்தைப் படித்த போது திறந்தன. “முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இவரே உதாரணமாக இருக்கிறார்.

K.-Jayaganesh


Advertisement

 

1. கோவிந்து ஜெய்சுவால் – ரிக்க்ஷாக்காரரின் மகன்

வாரணசியில் ஏழ்மையில் பிறந்த ஜெய்சுவால், சிறு வயதில் தன் பெற்றோர் மற்றும் மூன்று சகோதரிகளுடன் நெரிசலான வாடகை அறையில் வாழ்ந்தார். தந்தை, தள்ளுவண்டி இழுப்பவர், தாய் இல்லத்தரசி. அவர் பள்ளிக்குச் சென்ற நாள் முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் வறுமையால் அவர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே  நிறுத்த வேண்டியிருந்தது. அவர்  தந்தைக்குக் காலில் ஏற்பட்ட  காயத்தால் தள்ளுவண்டி இழுக்கமுடியாத நிலை வந்தது; இது அவர்கள் பொருளாதாரத்தை மேலும் பாதித்தது. ஆனால் , ஜெய்சுவால் தன் குடும்பத்தைப் பார்த்துக் கொண்ட அதே நேரத்தில் தன் ஐஏஎஸ் கனவுகளையும் நிஜமாக்க முற்பட்டார். இறுதியில் அவரது அயராத உழைப்பிற்குக் கிடைத்த பயனாக 2007 ஆம் ஆண்டு , இந்திய அளவில் , பொதுத்துறைத் சேவைகள் தேர்வில் 48 ஆவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தார்.

Govind-Jaiswal-–-The-Son-of-a-Rickshaw-Puller

 

 

 

 

 

 

 

 

 

Advertisement


  • Advertisement