ஊக்கமளிக்கும் 6 தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகள் 

5:46 pm 1 Jul, 2016


திரைப்படங்களிலும் கற்பனைக் கதைகளிலும் , கதாநாயகன், எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் இறுதியாக வெற்றி பெறுவது உறுதி தான். ஆனால் நிஜ வாழ்வில் , தனி மனிதன் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள், ஆகாயத்திலிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வர செய்யப்பட்ட கடுமையான முயற்சியான “பகீரதப் பிரயத்னம்” போலாகும்.  அதே போலத் தான் தொழில் முனைவோர்களும் பிரதானமாகத்  தன்  உழைப்பையே மூலதனமாகக் கொண்டு தொழிலை நிலைநிறுத்த வேண்டும். அப்படி எல்லாராலும் விரும்பப்படும் 6 தொழில் அதிபர்களின்   ஊக்கம் அளிக்கும் கதைகளை ஒவ்வொன்றாகக் காணலாம்.

6. ஜாம்ஷெட்ஜி டாட்டா

உலகில் மக்களின் வெற்றி , அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும் முதலீட்டை கையாளும் திறனாலும் அளக்கப்பட்டால் , ஜாம்ஷெட்ஜி டாட்டாவுக்கு நிகராக வெகு சிலரே  மதிக்கப்படுவர்.  ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பயந்து, தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டு விட்டு அவர்களுக்கு முகஸ்துதி செய்துப் பிழைத்த அற்ப உயிர்கள் வாழ்ந்த அதே காலத்தில், தன் நிறுவனங்களில் தன் நாட்டு மக்களுக்கு வேலைக் கொடுத்து அவர்களின் வாழ்விலும் தன் தாய்நாட்டின் எதிர்காலத்திலும் பெரிய மாற்றங்களை உருவாக்க எண்ணிய அவரது கனவை மெச்ச வார்த்தைகள் இல்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் போது , குறைந்த அளவு  ஆதாரங்களுடன்  அவர் கண்ட துணிச்சலான கனவு , இன்று மெய்யாகியுள்ளது ; ‘ டாட்டா’ நிறுவனங்களின் குழுமம் இப்போது நான்கு இலட்சம் பேருக்கு வேலைக் கொடுத்து வருகிறது.

Jamshedji-Tata

 

5. தீருருபாய் அம்பானி

பக்கோடா விற்றது முதல், ஏமன் நாட்டில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்தது வரை இவர் செய்யாத வேலைகளே இல்லை எனலாம். இந்தியர்கள் தங்களைப் பற்றியும் தங்களுடைய  ஆற்றல்களின் எல்லைகள் பற்றியும் நினைத்த விதத்தையே மாற்றிய ஒரு தொழிலதிபர் தான்,  குஜராத்தைச் சேர்ந்த தீருபாய் அம்பானி.  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ,  அன்று நிலவிய அரசாங்கத் தலையீடு மிக்க சோஷலிச கோட்பாட்டிற்கு , அரசின் தலையீடற்ற வியாபார முறையான முதலாளித்துவம் என்னும் ஆயுதத்தை கொண்டு  முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு காலத்தில் மாதம் முந்நூறு ரூபாய் மட்டுமே சம்பாதித்தவர்,  இந்தியா திரும்பி வெறும் 15,000 ரூபாய் முதலீட்டுடன் ‘ரிலையன்ஸ் ‘ நிறுவனத்தை ஆரம்பித்தார்.   ஒரே அறை இருந்த வீட்டில் வசித்து தொழில் தொடங்கியவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பரம்பரை கனவான்கள் வாழும் தென் பம்பாயில் குடியேறினார். அவரது நாணல் போன்ற வளைந்து கொடுக்கும் மனப்போக்கு சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் குடிசையிலிருந்து கோட்டைக்குச் சென்ற கதை பல பேருக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடியது.

Dhirubhai-Ambani

 

4. கிரண் மஜும்தார் ஷா

பயோகான் ( Biocon) தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் இருக்கும் , கிரண் மஜும்தார் ஷா நாட்டின் பெண்களுக்கு முன்னோடியாக உள்ளார். பலரும் வாழ்வில் பெரிய பெரிய கனவுகளை நோக்கிச் செல்வர்; ஆனால் , பணப் பற்றாக்குறையின் காரணமாகத் துவண்டுவிடுவர். கிரணும் இப்படிப்பட்ட கனவுகளைத் தான் சுமந்து கொண்டிருந்தார்.பெங்களூரில் இருந்த தன் வாடகை வீட்டின் ‘கார் ஷெட்’டில்  தனது ,’உயிர் தொழில்நுட்ப ‘

(Bio-Technology) நிறுவனத்தைத் தொடங்கினார். தகவல் தொழில்நுட்பத்தின் (IT) மீதிருந்த மோகத்தால் இவரின் நிறுவனத்தில் முதலீடு செய்ய எவரும் முன் வரவில்லை. “கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று,வீட்டில் சமையலைப் பார்த்துக் கொள்ளாமல் இந்த வீண் வேலை எதற்கு? ” எனப்  பலரும் மஜும்தாரை ஏளனம் செய்தனர். மேலும் எந்த வங்கியும் நிதி கொடுக்க விரும்பவில்லை ;  நிறுவனத்தில் வேலைக்கு சேர யாரும் தயாராக இல்லை. இவ்வளவு இடர்களையும் தாண்டி அவருக்கு நிதி உதவி கிடைத்த போதிலும் , பெரிய அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. 2004 ஆம் ஆண்டு அவரது நிறுவனத்தின் பப்ளிக் இஷ்யு –  ‘ஐபீஓ’ ( IPO)  – பங்கு சந்தையில் 32  முறைக்கும் மேலாக சந்தாக்களைப் பெற்ற போது தான் ஆராய்ச்சிக்கும் மேம்படுத்தவும் தேவைப்பட்ட நிதிகள் கிடைத்தன . அங்கிருந்து அவர் வைத்த ஒவ்வொரு படியும் வெற்றிப் படியாகவே அமைந்தது.

Kiran-Mazumdar-Shaw

 

3. மார்க் ஜக்கர்பர்க்

உலகப் புகழ்பெற்ற சமூக வளைத்தளமான ‘ முகநூலை’ ( Facebook) நிறுவியவரான, 27 வயது நிரம்பிய  மார்க் ஜக்கர்பர்க்கு , கல்லூரியில் இருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தாலும், அமெரிக்காவின் தலைசிறந்த தொழிலதிபர்களுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி பேர் பயன்படுத்தும் இத் தளத்தை அவர், 19 வயது இளைஞனாய் இருந்த போது ,  உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய திரைபடத்தில் சொல்லபட்டிருப்பது போல ஹார்வர்டில் தன்னுடன் படித்த காதலியை வேவு பார்க்கத் முகநூலை தோற்றுவித்தார்.  2010 ஆம் ஆண்டில் , பிரபல ‘டைம்’ பத்திரிக்கை அவரை “மேதாவியான இளைஞன்” என வர்ணித்தது. இந்தக் கண்டுபிடிப்பு தங்களுடையது எனக் கோரிப் பலரும் வழக்குகள் தொடர்ந்தனர் ; எனினும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து, மார்க் ஜக்கர்பர்க்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர்க்கு அடுத்தபடியாக இணையதளத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.


Marc-Zuckerberg

 

2.ஸ்டீவ் ஜாப்ஸ்

இவர் பிறப்பால் மேதாவியாகப் பிறந்தார் எனலாம். ஒரு கல்யாணமாகாத பெண்ணுக்குப் பிறந்தார்; குழந்தையற்ற தம்பதியாலே தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் ; கல்லூரியில் சேர்ந்து பின் பணமில்லாததால் பாதியில் வெளியேறினார் ; காலியான ‘கோக்’ புட்டில்களை விற்று வந்த பணத்தில் சாப்பிட்டார் ; தங்க இடமில்லாமல் நடைபாதையில் படுத்து உறங்கினார் ; ஞாயிறு இரவுகளில் ‘ஹரே கிருஷ்ணா’ கோவிலுக்குச் சென்றார் – நல்ல உணவு உண்பதற்காக !  என்ன? கோட்கும் போதே தமிழ்ப்படக் கதை போல் உள்ளதா? அவர் வாழ்க்கையே ஒரு கதையைப் போன்றது தான். பின், தன் கடின உழைப்பால், இன்று உலகம் போற்றும் ‘ஆப்பிள்’  நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரின் நிறுவனத்திலிருந்தே அவரை வெளியேற்றினர். வெளியேறிய பின் அவர், ‘ நெக்ஸ்ட் ஸ்டெப்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்; ஆனால் அது வெற்றி பெறவில்லை. சிறிது காலம் ‘பிக்ஸாரி’லும் பணிபுரிந்தார். 1996 ஆம் வருடம் ‘மைக்ரோசாப்ட்’  நிறுவனத்தின் வளர்ச்சி ஆப்பிலின் மீது பெரிய அளவில் பாதிப்புகளை  ஏற்படுத்திய போது மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிலுக்குத் திரும்பினார். பிறகு, அவரின் திறமையால் உருவான ‘ ஐ போன்’ இன்று அண்டமெங்கும் பிரபலமாகி அவரைக் காட்டிலும் நீடித்து வாழ்கிறது.

Steve-Jobs

 

1.பில் கேட்ஸ்

உலக மக்கள் அடிப்படையாகச் சிந்திக்கும் முறையையே மாற்றவும், உலகில் இதுவரை இல்லாத ஒன்றை உருவாக்கவும் ஒரு அதிமேதாவியால் மட்டுமே முடியும். பரந்து விரிந்த இவ்வுலகில் தன் புத்திசாலித்தனத்துக்கும் சொத்துக்கும் பேர் போனவர், மைக்ரோசாப்டின் நிறுவரான பில் கேட்ஸ் ஆவார்.  1973-ல் ஹார்வர்டில், கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார். அவர் கணினி மீது கொண்ட ஆர்வத்தால் இரவுகளில் கணினியில் ஆராய்ச்சி செய்தார் ; பகலில் வகுப்புகளின் போது உறங்கினார். அவரும் அவர்  நண்பர் ஆலனும் சேர்ந்து ‘ பேஸிக்’ என்ற மென்பொருள்நிரலை (சாப்ட்வேர் ப்ரோக்ராம்) உருவாகியுள்ளதாகவும், அதை அவர்கள் வைத்திருந்த ‘ அல்டெய்ர்’ என்ற இயந்திரத்தில் பயன்படுத்த முடியும் என்றும்  ‘எம்ஐடி’யின் (MIT)  கல்லூரி நிர்வாகத்திடம் பெருமை சாற்றிக்கொண்டனர். ஆனால் , அவர்கள் அந்த நிரலுக்கான குறியீட்டை எழுதியிருக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் அதனை காண்பிக்க அவர்களைக் கூப்பிட்ட போது, திருடனுக்கு தேள் கொட்டியது போலாகிவிட்டது.  பின் அல்லும் பகலுமாய் உழைத்து அவர்கள் அந்த குறியீட்டை உருவாக்கி  முடித்தனர். பின்னர், உலகில் மென்பொருளுக்கான சந்தை உருவாகிவிட்டது என்று தெரிந்ததும் ஹார்வர்டிலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.  இதுவே, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனம் உருவாக வித்தாய் அமைந்தது.

Bill-Gates

 

 

 

Popular on the Web

Discussions  • Co-Partner
    Viral Stories

TY News